We Magazine Logo
India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

சர்கார் – திரை விமர்சனம்.

சர்கார் – திரை விமர்சனம்.

இரா. ரவிஷங்கர்.

‘சர்கார்’ கதை என்ன என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆனால் திரைக்கதை……?

அங்கேதான் ‘’மெர்சல்’.

தொழிலில்… செல்லும் நாடெல்லாம் இருக்கும் போட்டி கார்பொரேட் நிறுவனங்களை, தன் வழிக்கு கொண்டு வர 22,000 பேர் வேலை இழந்தாலும் பரவாயில்லை, 10,000 குடும்பம் நாட்டை விட்டே ஓடினாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ‘கார்பொரேட் கிரிமினல்’, சென்னையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளிக்க, அதில் தப்பிக்கும் ஒரு குழந்தைக்காக நெகிழ்ந்துப் போகிறார்.

குடும்பத்தில்…அண்ணனும் அண்ணியும் முட்டிக்கொண்டு பிரிந்திருந்தாலும் அதைப் பற்றி ஒரு வாத்தை கூட பேசாமல், அண்ணியின் தங்கையின் மீது ஈர்ப்பு கொள்கிறார்.

அரசியலில்….தேர்தலில் போட்டியிடுபவர் தனக்கு சாதகமான பிரச்சாரத்தை தேர்தல் அன்று மேற்கொள்ளகூடாது என்பது  கூட தெரியாமல், ஃபேஸ்புக் லைவ்வில்  அனல் பறக்க பேசுகிறார்.

இப்படி பல லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே சர்காரை ’தகுதிநீக்கம்’ செய்ய முயற்சிக்கையில், விஜயின்  பெர்ஃபார்மன்ஸினால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் இந்த ‘கமர்ஷியல் சர்கார்’ தாக்குப்பிடிக்கிறது.

வழக்கம் போல் விஜயின் நடிப்பு ’தெறி’. கார்பொரேட் கிரிமினலாக நடிக்க வேண்டுமென்பதற்காகவே வெயிட்டான சில காட்சிகளில் தலை கைகளை ஆட்டும் ஸ்டைலை விட,  தனது மெச்சூர்டான பாடிலாங்க்வேஜிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது தியேட்டரில் நம்மை சுத்தி இருக்கிற பதினெட்டு வரிசை சீட்காரர்களின் கமெண்ட். கீர்த்தி சுரேஷ் ‘ஸாரி’. கதையில் அவருக்கு வேலையும் இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், ஒரு ரவுண்ட் பூசினது போல இருக்கிறார். காஸ்ட்யூம், மேக்கப்ப் சமாச்சாரங்களில் கவனம் செலுத்தினால் ஹீரோயினாக பெரும் ரவுண்ட் வர ’கீர்த்தி’ அதிகம்.  அடுத்து பழ. கருப்பையாவும், ’ரெண்டு’ ராதாரவியும் தமிழக அரசியல் தலைகளை நினைவுப்படுத்துகிறார்கள். ராதாரவி கிடைக்கும் இடமெல்லாம் நடிப்பினால் தியேட்டரில் ‘ஒட்டு’ வாங்குகிறார். வரலட்சுமி   மிரட்டினாலும் என்னவோ மிஸ்ஸிங் என்பது போன்ற ஒரு உணர்வு வருகிறது., , யோகி பாபுக்கு, இதில் ’போகி’

ராம்- லக்‌ஷ்மன் இருவரின் ஆக்‌ஷன் அத்தியாயத்தில், சண்டைக்காட்சிகளில் சூடு பறக்கிறது. அயோத்திக்குப்பத்தில், தக்காளி மூலம் கார்பொரேட்களின் முகத்திரையைக் கிழிக்கும் காட்சி ’ஓபன் டாக்’. இலவசப் பொருட்களை தீயில் கொழுத்தும் காட்சி அடுத்த தேர்தலுக்கான டீசர். ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன் சர்காருக்கான பரபரப்பை காட்சிகளில் பற்ற வைத்திருக்கிறார். .

அரசியல் படமென்றால் வசனத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் ஜெயமோகன் இருவரும் அதை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் காரில் பயணிக்கும் போது கார் ஓட்டுநர் சொல்லும் ‘வாட்ஸ் அப் தமிழனும், ஃபார்வேட் போராளியும்’ வசனம் யதார்த்தம். ஒரு ஓட்டினால் உண்டான அரசியல் மாற்றங்கள் குறித்த காட்சி நச்.

49[ஓ] என்ற ஒரு வாய்ப்பு சட்டத்தில் இருப்பதைப் போல் 49[P] என்ற சட்டமும் வாக்காளருக்கு பலம் சேர்க்கும் என்பதை என்பது நமக்கு தெரிய வைத்த ஏ.ஆர். முருகதாஸூக்கு நன்றி.

சர்காரின் வேகத்திற்கு தடைப்போடுகிறது படத்தின் நீளம். அதேபோல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கும் நானும் மீனவன் தான் என விஜய் உருகும் காட்சி. தமிழே தெரியாத அமெரிக்க பவுன்சர்களிடம் நீங்கள் கிளம்புங்கள் என விஜய் தமிழில் விளக்கும் காட்சி. விஜய், யோகி பாபுவுடன் சவால் விடும் ‘பிஸ்தே’ பாடல் இல்லாவிட்டாலும் படத்திற்கு பாதிப்பில்லை. அதேபோல் திடீரென வரும் விஜய்- கீர்த்தி டூயட் பாடல்… ஞாபகமில்லை… அதுவும் பாதிப்பை உண்டாக்கவில்லை. இவைக்கு கத்திரிப் போட்டாலே பத்து நிமிஷம் மிச்சம். இப்படி ஆங்காங்கே சில காட்சிகள் சர்காரை ஸ்லோ கார் ஆக பயணிக்க வைக்கிறது.

இசை ஏ.ஆர். ரஹ்மானா என கேட்க தோன்றுகிறது. ‘ஒரு விரல் புரட்சி’ பாடலைத்தவிர இசைப்புயலில் இசைத் தாண்டவம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆஸ்கார் தமிழன், இனி தனக்கு ஆஸ்கார் முக்கியமா அல்லது தமிழ் முக்கியமா என முடிவெடுத்து கவனம் செலுத்தினால் நல்லது.

விஜயின் அரசியல் எண்ட்ரீக்கான விதைகளை மேலோட்டமாக கமர்ஷியலாக விதைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.