India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

தடம் திரை விமர்சனம்

தடம் திரை விமர்சனம்

  • இரா. ரவிஷங்கர்

ஒரு கொலை… உருவ ஒற்றுமை கொண்ட [Identitical Twins] இரட்டையர்கள்…..இருவரில்  யார் கொலையாளி என்பதை காவல்துறை  கண்டுப்பிடித்ததா இல்லையா என்பதே பார்க்கும் ஒவ்வொருவரையும் தடதடக்க வைக்கும் ’தடம்’.

’தடையறத் தாக்க’  படத்திற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும், அருண் விஜய்யும் மீண்டும் கைக்கோர்த்திருக்கும் படம். இந்த இருவர் கூட்டணி மீண்டும் ஒரு தடம் பதிக்க வாய்ப்பளித்து இருக்கிறது.

திரைக்கதை முன்னும் பின்னும் மாறி மாறி நகர்கிறது, அதையும் கவனமாகவே கையாண்டு இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி

எழில், கவின் என இரு கதாபாத்திரங்களில் அருண் விஜய்.  இரு கதாபாத்திரங்களும் உருவ ஒற்றுமை உள்ளவை. அதனால் தமிழ் சினிமா கமர்ஷியல் ஃபார்மூலாவின் படி தோற்றத்தில் தில்லாலங்கடி பண்ணாமல், நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்கள்.

என்ஜினீயர் எழிலின் காதலி ஒரு திரைப்பட விமர்சகர், புதுமுகம் தன்யா ஹோப். கள்ளன் கவினின் காதலி செல்ஃபோன் கடையில் வேலைப்பார்க்கும் நடுத்தர குடும்பத்து பெண், புதுமுகம் ஸ்மிருதி வெங்கட். அடுத்தது சப் இன்ஸ்பெக்டராக, வித்யா ப்ரதீப்.  இவர்களுடன் பெப்சி விஜயன் மற்றும் ரைட்டர், போலீஸ் என யதார்த்தமான நடிப்பில் அசத்தும் தெரிந்த, தெரியாத நட்சத்திரங்கள்.

சப் இன்ஸ்பெக்ட்ராக வரும் வித்யா ப்ரதீப், கண்களால் அதிகம் பேசுகிறார். அழகான, அளவான, அலட்டாத  நடிப்பில் நம் கவனத்தை ஈர்க்கிறார். தன்யா ஹோப்புக்கும், ஸ்மிருதி வெங்கட்டுக்கும்  பெரிய ஹோப் இல்லையென்றாலும், காட்சிகள் மற்றும் அவற்றின் வசனங்களால் நினைவில் நிற்கிறார்கள்.  அருண்  விஜயின் அம்மாவாக வரும் சோனியா அகர்வாலுக்கு வேலையில்லை. ஒரே க்ளோஸ்ப், அப்புறம் மிட் ஷாட், லாங் ஷாட்களில் காட்டி தூக்கிலிட்டு விடுகிறார்கள்.

அருண் விஜய், தன்யா ஹோப் இருவரும் சந்திக்கும் லிப்ட் காட்சிகள் ஹைக்கூ காதல். எட்டாவது தளத்தில் வேலை செய்யும் அருண் விஜய், ஏழாவது தளத்தில் வேலைப்பார்க்கும் தன்யாவை லிப்ட்டுக்குள் வைத்து சைட் அடிப்பது, காபி குடிக்க அழைப்பது. அழகு என்றால்…

’கேள்வியை சரியாக கேளுங்க..அப்புறம் பார்க்கலாம்’ என்று தன்யா சொல்லும் பதில்… அதிரிபுதிரி அழகு.

ஹெளரா பாலம் இருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு, ’ஹெளரா ப்ரிட்ஜ்ஜா’ என்று தன்யாவிடம் கேட்கும் போது,  அருண் விஜயை நக்கலடிக்கும் தன்யாவிடம்,  ’எவ்வளவுன்னாலும் தாங்கும்’ என ப்ரேசியரை ஹெளரா ப்ரிட்ஜ் உடன் ஒப்பிட்டு கூறும் காட்சி மெக்கானிக்கலி அடல்ட்!

கவின் ஒரு பெண்ணிற்கு டிமிக்கி  கொடுத்துவிட்டு, தப்பிப்பதற்காக ஆண்கள் கழிப்பறைக்குள் நுழைவதும், அப்பெண் உள்ளே வந்து ஆண்கள் ’பிஸியாக’ இருப்பதையும் கண்டுக்கொள்ளாமல் தெறிக்க விடும் காட்சி கலாச்சார கசாமுசா!.

டூப்ளிகேட் லேப்டாப்களை விற்றதுக்காக கம்பி எண்ணவேண்டும் என்ற சூழ்நிலையில், ‘ஜெயிலுக்குள்ள ’களையா  இருந்தா அவனுங்கள விட்டு வைக்கமாட்டானுங்க. ஃபுல் பாடி மசாஜ்தான். என் முகத்தை அடிச்சு பெயர்த்து  விட்டுறீயா… அப்படியாவது தப்பிச்சிருவேன்’ என யோகி பாபு அடிக்கும்        கமெண்ட்  சிங்கிள் ஷாட் சிரிப்பு.

தன்யா தனது தோழியிடம், ‘’வேலைய விட்டுட்டேன். வாரத்துக்கு ஆறு படம் பார்த்து ரீவியூ எழுதணும்’ என்பது  சொல்வது சினிமா பத்திரிகையாளர்களின் வலியைச் சொல்லும் ஒன்லைன் டச்.

கவின், ஸ்மிருதி வெங்கட் வீட்டுக்கே வந்து, பணம் கேட்டு வாங்கிச் செல்லும் போது, ‘’என் பேரு தெரியுமா’ என்று கேட்பது காதலின் உச்சம்.

வாங்கிய கடனை கவின் திருப்பிக் கொடுக்கும் காட்சியில், ‘’நான் பொய் சொன்னேன்னு உனக்குத் தெரியும். அப்படியும் ஏன் பணம் கொடுத்த’ என ஸ்மிருதி வெங்கட்டிடம்  கேட்கும் போது, ‘’பணத்தை எடுத்துட்டு போயிருந்தா உங்கள மறக்குறது எனக்கு ஈசியாக இருந்திருக்கும். என்ன மறக்குறது உங்களுக்கு கஷ்டமா இருந்துருக்கும்’’ என்பது முன்பின் தெரியாத ஒருவன் மீதுள்ள காதலையும் கண்ணியப்படுத்திருப்பது அருமை.

முதல்பாதியில் காதல், களவு, கலாட்டா என ஆரம்பிக்கும் படம், கொஞ்ச நேரத்தில் த்ரியைப் பற்ற வைத்த ராக்கெட்டை போல எகிற ஆரம்பிக்கிறது. ஒரு கொலை. சந்தேகத்திற்கு இடமான இரட்டையர்கள். விசாரணையில் குழப்பங்கள் என திரைக்கதை பரபரவென நகர்கிறது. விசாரணை கோணத்தில் கதை நகர்ந்தாலும், போரடிக்காமல், வேகம் குறையாமல் திரைக்கதை அமைத்திருப்பது ’அட்ரினலின் ஆக்‌ஷனை’ திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறது. இதற்கு பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. அடுத்து, ஒளிப்பதிவு  படத்தின் காட்சிகளோடு நம்மை ஒன்ற வைக்கிறது

இப்படத்தின் பலம் என்று ஒரு பட்டியலிட்டால், இயக்குநர் மகிழ் திருமேனி, அருண் விஜய், ஒளிப்பதிவாளர் கோபிநாத், இசையமைப்பாளர் அருண் ராஜ், எடிட்டர், வித்யா ப்ரதீப் என அழகான பட்டியலை முன் வைக்கலாம்.

படத்தில் ஒட்டாத ஒன்று சோனியா அகர்வால் வரும் ஃப்ளாஷ் பேக். ஏன் ஏதற்கு என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமல், சீட்டாட்டத்தில் மூழ்கிக்கிடக்கிறார். தனது மகனுடன் தனி ஒரு பெண்ணாக க்ளப்புக்கு சென்று ஆண்களுடன் விளையாடுகிறார். பையனிடம் உன் அம்மா நீ நினைக்கிற மாதிரி இல்ல என்கிறார். தூக்குப் போட்டு உயிரை மாய்ந்து கொள்கிறார்.

பெரும் செலவில் எடுக்கப்படும் ஆங்கிலப் படங்களின்  திரைக்கதைக்கு இணையாக, பக்காவாக எழுதப்பட்டிருக்கும் இந்த திரைக்கதை மகிழ் திருமேனிக்கு ஒரு அடையாளம்.

நன்றாக நடித்தாலும் சரியான தளம் கிடைக்காத அருண் விஜய்க்கு இந்தப்படம் ஒரு தடம்.

தடம் – தரம்!