India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

பேட்ட விமர்சனம்

பேட்ட விமர்சனம்

  • இரா. ரவிஷங்கர்.

ஒப்பனை

பானு [ரஜினி சார்]

டைட்டிலில் இதுவரையில்லாத இப்படியொரு ‘சார்’ போட்டிருப்பதிலிருந்தே, அடுத்த இரண்டு மணிநேரம் ஐம்பத்தியொரு நிமிஷமும் பார்க்கப் போவது …ஒரு அக்மார்க்…..ஹால்மார்க்… ரஜினி ரசிகனின் அட்டகாசம் என்பது புரிந்துவிடுகிறது..

ஃப்ளாஷ்பேக்கில் நடக்கும் சம்பவங்களுக்கு பழிக்குப் பழி வாங்கும் 99,99,999-வது கதைதான். ஆனால் பழிவாங்குவது ரஜினி. அதான் ‘பேட்ட’.

அதார் உதார் விடும் கல்லூரி ஹாஸ்டலுக்கு, பெரிய இடத்து பரிந்துரையோடு வார்டனாக வருகிறார் ரஜினி. அங்கே ரவுசு விடும் பாபி சிம்ஹா டீமுக்கு மரண மாஸ்னா என்னவென்று காட்டுகிறார். ஒரு ஸ்டூடண்டின் காதலுக்கு தூது போகும் ரஜினிக்கு அங்கே பெண்ணின் அம்மா சிம்ரனைப் பார்க்கும்போது க்ரஷ் உண்டாகிறது. இதேவேகத்தில் ஒரு கும்பல், லவ் பண்ணும் அந்தப் பையனை கொலைப் பண்ண வருகிறது. அவர்களைத் துவைத்து எடுக்கும் ரஜினி, மயக்கமாக…. ஃப்ளாஷ்பேக். படத்தின் முதல் பாதி பற்றியெரிகிறது.

இயக்குநர் மகேந்திரன், சசிகுமார், த்ரிஷா, நவாஸூதின் சித்திக் என வெயிட்டான நட்சத்திரங்களை வைத்து வழக்கமான ஃப்ளாஷ்பேக். அடுத்து விஜய் சேதுபதியுடன் மோதும் பழிவாங்கும் படலம் என இரண்டாம் பாதியில் திரைக்கதை திண்டாட வேகம் லேசாக சரிகிறது.

சாதாரண டாக்டராக இருக்கும் மார்க் ரஃபலோ, கோபத்தில் ‘ஹல்க்’ ஆக விஸ்வரூபம் எடுக்கும்போது, அவரது பேண்ட் மட்டும் கிழியாமல் அப்படியே இருக்கும். சூப்பர்மேனுக்கு மட்டும் வயது ஏறவே ஏறாது. தன்னிடம் இருக்கும் அட்டகாசமான ஆயுதங்கள் எல்லாவற்றையும் இழந்த பின்னர், தனியொருவனாக எந்த துணையும் இல்லாமல், வில்லனின் சக்திவாய்ந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியத்தையும் தூள் தூளாக்குவார் ஜேம்ஸ்பாண்ட். இது எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையில் நம்முடைய ஆழ்மனதில் அந்த தில்லாலங்கடி சமாச்சாரங்களைப் படியவைத்திருக்கிறார்கள். அப்படிதான் நம்மூரில் ரஜினிகாந்த்.  இந்த சைக்காலஜியை புரிந்து கொண்டு, இடைப்பட்ட காலத்தில் காணாமல் போயிருந்த அந்த ‘ரஜினிகாந்தை’ திரையில் மீண்டும் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

’அபூர்வராகங்கள்’ படத்தில் கேட்டை திறந்தபடி உள்ளேவரும் அதே ஸ்டைலில் எண்ட்ரியாவதுதான் ரஜினியின் ஓபனிங் சீன்.  இதிலிருந்து படம் முழுக்க எங்கேங்கே வாய்ப்புகள் கிடைக்கிற்தோ அங்கெல்லாம் ரஜினியிஸத்தை காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ’கொல காண்ட்ல இருக்கேன்’ என ரஜினி அசால்ட்டாக சொல்லும் காட்சி செம ஹீரோயிஸம். சிம்ரனின் மகள், ரஜினியை அங்கிள் என்று கூப்பிடும் போது, ‘அங்கிள் மட்டும் வேண்டாம்’. என்ற சொல்வது கலக்கல். ரஜினி போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது கேர்ள் ஃப்ரெண்ட்டுடன் பேசியபடி வரும் சனத் ரெட்டியிடம், ‘உன் மாமியார்கிட்ட்தான் பேசிட்டு இருக்கேன்.’ என்று சொல்வது அசத்தல். ஃப்ளாஷ்பேக்கில் வரும் பேட்ட வேலன், 1980-களின் ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.

பொருத்தமான காஸ்ட்யூம்கள். பக்காவான விக். ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு  அதற்கேற்றவகையில் ஆட்டம், கொண்டாட்டம், ஆக்‌ஷன் காட்சிகள் வைக்கப்பட்டாலும், அதையும் தனது ஸ்டைலிலேயே பக்காவாக வெளிப்படுத்தும் மேனரிஸம் என ரஜினி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ’பேட்ட’ படத்தின் ஒட்டுமொத்த யூனிட்டும், ரஜினிக்காக மெனக்கெட்டு இருப்பது திரையில் தெரிகிறது.

சிம்ரன் சில காட்சிகளே வந்தாலும் ‘ஜில்’ரன். ’நண்பன்’ என்றாலே நினைவுக்கு வரும் சசிகுமார், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நிற்கிறார். நவாஸூதின் சித்திக், படத்தில் இருக்கிறார். ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக த்ரிஷா வந்து போகிறார். இயக்குநர் மகேந்திரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், விவேக் ப்ரசன்னா, தீபக் பரமேஷ்வர், சனத், குரு சோமசுந்தரம் என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், ரஜினியின் ஒன் மேன் ஷோ இவர்களை ஓவர்டேக் செய்துவிடுகிறது.

காதலர் தினத்தில், கலாச்சார காவலனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மட்டுமே பேட்டயுடன் மல்லு கட்டுகிறார்.  படம் முழுக்க அலட்டல் இல்லாமல், ஜஸ்ட் லைக் தட் போல வந்து ஈர்க்கிறார் விஜய் சேதுபதி,

க்ளைமாக்ஸில் ரஜினி வைக்கும் திருப்புமுனையில், வாலி, எதிரி என புராணத்தை காரணம் காட்டி சென்டிமெண்ட் டிராமா போட்டாலும், கண்களில் கண்ணீர் விழ இருக்கும் தருவாயில் நம்மைப் பார்க்கும் விஜய் சேதுபதி மீது தானாகவே ஒரு ஈர்ப்பு வருகிறது. மெளனிக்கும் அந்த இருட்டு திரையில் ஹீரோவாகிறார் விஜய் சேதுபதி.

பேட்டயில் ரஜினியை அடுத்து, மரண மாஸ்ஸாக கலக்கியிருப்பவர் ஒளிப்பதிவாளர் திரு [அ] திருநாவுக்கரசு. ஆரம்பம் முதல் இறுதிவரை திரு கேமரா கதையோடு பயணிக்கிறது, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இது திருவின் ‘சிறப்பான தரமான சம்பவம்’.

’மரணம் மாஸு மரணம்’ பாடலை இந்தாண்டின் மெகா ஹிட் வரிசையில் சேர்த்திருக்கும் அனிரூத்… கொல காண்ட்ல் கம்போஸ் பண்ணியிருக்கிறார். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். அதிலும் நவாஸூதின் சித்திக் வரும் காட்சிகளில் இடம்பெறும் இசை தூக்கல்.

ரஜின் இருக்கிறார் என்பதற்காக படத்தை இரண்டு மணிநேரம் ஐம்பத்தியொரு நிமிஷம் இழுப்பது நியாயமா கார்த்திக் சுப்புராஜ்? திரைக்கதை பலவீனமாக இருப்பதால் இரண்டாம் பாதியில் நமக்கு கொஞ்சம் டயர்டாவதை தவிர்க்க முடியவில்லை. ’ப்ரீயட்’ சம்பந்தமான காட்சிகளில் டீடெய்லிங் அவசியம் என்பதை ’ஜஸ்ட் லைக் தட்’ போல விட்டுவிட்டார்கள். மிசா காலத்தில் இருக்கும் ரஜினி, பேட்ட வேலன் ரஜினி, காளி ரஜினி என தனித்தனியாக பிரித்து விட்டு, பிறகு நடக்கும் சம்பவங்களோடு பார்க்கும் போது  ’டைம் மெஷின்’ ரிப்பேராகி எங்கெங்கேயோ பயணிப்பது போல் இருக்கிறது.

படத்தின் நீளத்தை, எடிட்டர் பாரபட்சம் பார்க்காமல் கத்திரிப் போட்டிருந்தால், பேட்ட இன்னும் மரண பேட்ட யாக இருந்திருக்கும்.

பேட்ட – #Rajinified வேட்ட