We Magazine Logo
India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

2 point O- திரை விமர்சனம்.

20-review-banner

2 point O- திரை விமர்சனம்.

  • இரா. ரவிஷங்கர்

பிறந்த உடனேயே மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும் சிட்டுக்குருவியின் மீதான அன்பினால், பறவைகளின் வாழ்வு உரிமைகளுக்கான போராடும் பக்‌ஷிராஜன், தன் உயிரையே கொடுத்து ஹைடெக்காக பறவைகளுக்காகப் போராடுவதுதான் ’2 பாயிண்ட் ஒ’ பட்த்தின் ஒன்லைன்.

படத்தின் ஒன்லைனை பார்த்தாலே புரியும் இப்படத்தின் உண்மையான ஹீரோ யார்…வில்லன் யார் என்று…பக்‌ஷிராஜனாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்‌ஷய் குமார். வசீகரன், சிட்டி, சிட்டி 2.0 மற்றும் குட்டி 3.0 ஆக இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இந்த முறை வசீகரனின் ஜோடியை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, சிட்டிக்கு ஒரு ரோபோட்டிக் காதலியாக ’நிலா’ வை களமிறக்கி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவை விஷூவல் விருந்தின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துகள்!

இதுவரையில், பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளும் பிரம்மாண்டத்தை காட்டி புதிய ட்ரெண்ட்டை உருவாக்கிய ஷங்கர், இந்த முறை படத்தின் 80 சதவீத காட்சிகளில் மெகா மகா பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறார்.

படத்தின் டைட்டில் கார்ட்டில் இருந்தே ஆரம்பிக்கிறது 3டி  கொண்டாட்டம். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸை ‘அன்லிமிடெட் மீல்ஸ்’ போல விருந்தாக படைத்திருப்பது படத்தின்  பலம். டெக்னாலஜியில் மிரட்டினாலும், இந்த பூவுலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் உரியது’ என்ற சமூக அக்கறையை  வழக்கம்போல் தனது ஃப்ளாஷ்பேக்கில் வைத்திருப்பது ஷங்கரின் ஃபேவரிட் டச்.

 மொபைல் ஃபோன்கள் அறை முழுவதும் ஆக்ரமித்தபடியே ஒலிக்கும் காட்சி ‘பளீச்’. சிட்டி வெர்ஷன் 2-ன் அட்ரினலின் ஆக்‌ஷன், சிட்டி-3 வெர்ஷன் குட்டியின் கலக்கலான காட்சிகள், பக்‌ஷிராஜனுடன் நம்மூர் ஹல்க் போல விஸ்வரூபமெடுக்கும் சிட்டியின் மெகா சண்டைக்காட்சி என ரசிகர்களுக்கு தனது பாணியிலேயே  பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளித்திருக்கிறார்  ஷங்கர்.

படத்தில் சூட்டைக் கிளப்புவது  சிட்டி 2.0 வெர்ஷனின் வில்லத்தனமான ஹீரோயிஸம். மற்றொரு ஹியூமனாய்ட்டான நிலாவிடம், ’வசீகரன் பண்ணினதிலேயே உருப்படியான ரெண்டு விஷயம் ஒண்ணு நான், இன்னொன்னு நீ…..’ என கமெண்ட் அடிப்பதிலும், ’இந்த நம்பர் ஒன் நம்பர் டு பாப்பா விளையாட்டெல்லாம் நம்மகிட்ட வேண்டாம். சிட்டி எப்பவுமே சூப்பர்’ என்று கலாய்ப்பதிலும் சிட்டி 2.0 செம கெத்து.

ஆனால்….

திரைக்கதையில்… இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்திற்கு அதிகம் மெனக்கெடாமல் போனது ஏனோ? விஷூவல் எஃபெக்ட்ஸூக்காக திரையரங்குகளில் ரசிகர்கள் அணியும் 3டி கண்ணாடி, திரைக்கதையிலிருக்கும் ஓட்டைகளை காட்டாமல் மறைத்துவிடும் என்று ஷங்கர் நம்பிவிட்டார் போலும்.

சென்னையில் மட்டும் ஏன் ஃபோன்கள் பறந்து காணாமல் போய்கின்றன? சென்னைவாசிகள் மட்டும்தான் சிட்டுக்குருவி இனத்தின் அழிவிற்கு காரணமானவர்களா? பறவைகளுக்காக இறந்தப் பின்பும் போராடும் அக்‌ஷய் குமார் வில்லனா அல்லது நல்லதுக்காக போராடும் ஆன்மாவை தொழில்நுட்பங்களின் உதவியுடன் அடக்க முயலும் வசீகரன் வில்லனா…

அக்‌ஷய் குமாரை பாலிவுட் மார்க்கெட்டை குறிவைத்து 2பாயிண்ட்0 டீமில் சேர்த்திருப்பார்கள் போல. ஆனால் ஏதோ ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போல, முழுக்க வயதான கெட்டப்பிலேயே  தோன்றுகிறார். அக்‌ஷய் குமாருக்கான காட்சியில் அவர் இல்லாமல் வேறு யார் நடித்திருந்தாலும் பெரிய மாற்றம் இருந்திருக்க போவதில்லை. இப்படி ஷங்கர், இப்படத்தில் விட்ட 0-கள் அதிகம். டாட்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பின்னணியில் முன்னணி வகிக்கிறது. பாடல்களில் ம்ம்ம்ம்…

படத்தின் உண்மையான ஹீரோக்களில் முன் நிற்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. அதிரிபுதிரியாக கேமராவில் விளையாடி இருக்கிறார். அநேகமாக, நீரவ் ஷாவு இனி பாலிவுட்டில் மோஸ்ட் வாண்ட்டட் சினிமட்டோக்ராஃபர் பட்டியலில் இடம் நிச்சயம்.

அடுத்த ஹீரோ ஒலிப்பதிவில் சின்ன்சின்ன அம்சங்களையும் கோர்த்த ரசூல் பூக்குட்டி.

இவர்களை அடுத்து படம் முழுக்க விஷூவல் விளையாட்டை நிகழ்த்தியிருக்கும் அனைத்து ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் குழுவின் ஒவ்வொருவரும் 2.0-ன் ஹீரோக்களே.

படம் முடிந்து வெளிவரும்போது, ’2 பாயிண்ட் ஒ’, ஷங்கர் படமா, இல்லை ரஜினிகாந்த் படமா ???’ என்று கேள்வி கேட்பவர்களுக்கான

பதில், ’இது ‘குழந்தைகளுக்கான படம்’.