We Magazine Logo
India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

K13 – விமர்சனம்

K13 – விமர்சனம்

  • இரா. ரவிஷங்கர்.

பட்ஜெட் எகிறாமல், போட்டிருக்கும் முதல் பதறாமல், வசூல் சிதறாமல் படமெடுக்க வேண்டுமென்றால் ‘த்ரில்லர்’ வகை படங்கள் நல்ல சாய்ஸ் என்று சவால்விடும் த்ரில்லர் க்ரியேட்டர்களுக்கு  நம்பிக்கையூட்டி இருக்கிறது ‘K13’.

ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் இல்லை. அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் இல்லை. கவர்ச்சிக்காக வைத்திருக்கும் பாடல்களும் இல்லை. ஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு பப், ஒரு ஸ்டோரிபோர்ட் ரூம், ஒரு கார் அவ்வளவுதான் ஒன்றே முக்கால் மணிநேரம் பரபரக்க வைக்கிறது ‘K13’.

      பத்தாண்டுகளாக உதவி இயக்குநராக, முதல் பட வாய்ப்பு பத்து நாள் ஷூட்டிங்குடன் டிராப் ஆகிவிட்ட, இரண்டு நாட்களில் கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற மதியழகனாக அருள்நிதி, தனிமையில் ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’கினால் எழுத முடியாமல் தவிக்கும் எழுத்தாளர் மலர்விழியாக ஷ்ரத்தா ஸ்ரீராம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக ‘ஸ்டெல்லா மிஸ் புகழ்’ லிஸ்ஸி இந்த மூன்று பேரும்தான் படமே.    மலர்விழியின் தோழி பவித்ராவாக காயத்ரி சங்கர், கே 7 எதிர் ப்ளாட் ஒருதலைக் காதலனாக ரிஷிகாந்த், காயத்ரி சங்கரின் கணவராக ஆதிக் ரவிசந்தர், கூரியர் பாயாக யோகிபாபு இவ்வளவுதான் மீதி கதாபாத்திரங்கள்.

      பேக்கிங் பண்ணும் டேப்பினால் பக்காவாக பேக் செய்யப்பட்ட நிலையில், சேரில் உட்கார்ந்திருக்கிறார் அருள்நிதி. பக்கத்தில் கோலா கேனில் இருந்து  கொட்டியது போல ரத்தம். அடித்த டோப்பின் வீரியம் குறைய, மயக்கத்தில் இருந்தவர் மெல்ல முழிக்கிறார். திமிர முயற்சிக்கிறார். பின்னால் ஒரு பெண் இருப்பது அவர் முன்னால் இருக்கும் கண்ணாடி கதவில் தெரிகிறது. கஷ்டப்பட்டு எகிறி விழும் அருள்நிதிக்கு முன்னால், இடது மணிக்கட்டு நரம்பு வெட்டப்பட்டு பிணமாக ஷ்ரத்தா ஸ்ரீராம். முந்தைய நாள் இரவில் பப்பில் இம்ப்ரஸ் செய்த பெண் இப்படி இம்சை ஆகிவிட்டாளே  அருள்நிதி ஷாக்காக, நமக்கும் டென்ஷன் தொற்றிக்கொள்கிறது.

      ஷ்ரத்தா ஸ்ரீராம் எப்படி இறந்தார்? அது கொலையா.. அல்லது தற்கொலையா….? பிணத்துடன் ஃப்ளாட்டுக்குள் மாட்டியிருக்கும் அருள்நிதி எப்படி அங்கிருந்து தப்பிக்கிறார்…. ? அவருக்கு கதை கிடைத்ததா…. இல்லையா…? திரைப்படம் இயக்கினாரா ….இல்லையா?  ஒவ்வொரு கேள்விகளுக்குமான விடைதான் படம்.

      முதல் பாதியில் 5 நிமிடம் தவிர அனைத்து காட்சிகளும் ஷ்ரத்தா ஸ்ரீராமின் ஃப்ளாட்டுக்குள்தான் நடக்கிறது, அதற்குள்ளே சிங்கிளாக கதையை நகர்த்துகிறார் அருள்நிதி. இரண்டாம் பாதியில் வேகம் பற்றிக்கொள்ள, க்ளைமாக்ஸூக்கு முன்பாக ஒவ்வொரு முடிச்சுகளையும் அடுத்தடுத்து அவிழ்க்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். ஆனால்  க்ளைமாக்ஸ் ஒரு அதிரிபுதிரி திருப்பம்.

      பொதுவாக த்ரில்லர் வகையறா படங்களை விமர்சனம் செய்யும் போது, கதையின் ப்ளாட்டை, திரைக்கதையின் போக்கைப்பற்றி அதிகம் விவரிக்காமல் விட்டுவிடுவதே அப்படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்பவர்களுக்கு ’திரை விமர்சனம்’ அளிக்கும் மரியாதை.  அடுத்து, திரைக்கதையில் சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாலும், டென்ஷனை கிளம்பும் டெம்போவினால் அதுவும் தெரியாமல் போயிவிடுகிறது. இதற்கு சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கைக்கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறது. காமெடிக்கு யோகிபாபு, மதுமிதா, கிளாமருக்கு பப் என கதையில் வாய்ப்புகள் இருந்தாலும்,  த்ரில்லர்தான் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு அதை கமர்ஷியல் கலாட்டாவுக்குள் இழுக்காமல், கதையை கையாண்டு இருப்பது டைரக்டர்ஸ் கட்.

      வித்தியாசமான கதை, களத்தைத் தேர்ந்தெடுப்பதில் நிதானமாக, ஆனால் கமர்ஷியலாகவும் கைதேர்ந்தவராகி வரும் அருள்நிதிக்கு வாழ்த்துகள். வழக்கமான பேய், பிசாசு, பழிவாங்கல் இத்யாதி சமாச்சாரங்களின் மூலம் த்ரில்லரை கொடுக்காமல், தளத்தை மாற்றிய அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன், திரைக்கதையில் கொஞ்சம் கெடுபிடியாக இன்னும் தடாலடியாக இருந்திருக்கும்.

K13 – பார்ட்- 2 ரெடி பண்ணுங்க பாஸ்!